கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெறப்பட்ட பயிர் மற்றும் பண்ணைக்கடன்கள் முழுவதும் மத்திய, மாநில அரசுகள் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்யக்கோரி திருவள்ளூரில் கடன் விடுதலை பேரணி மற்றும் மாநாடு நடைபெற்றது.
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் திருவள்ளூரில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மாநாடு நடைபெற்றது. கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெறப்பட்ட பயிர் மற்றும் பண்ணைக்கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும், ஆந்திரா, தெலுங்கானாவை போல் உற்பத்தி மானியமாக ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும் எனவும், நெல் குவிண்டலுக்கு 4000 ரூபாயும், கரும்பு டன்னுக்கு 6000 ரூபாயும், கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 300 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும், வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் பரிந்துரையை உடனடியாக மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் எனவும், வன விலங்குகளால் உயிருக்கும் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை 20 லட்சமாக உயர்த்தி வாரிசுதாரர்களுக்கு வழங்கிட வேண்டும் எனவும், தமிழக அரசு கொண்டு வந்துள்ள நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023 ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் இருந்து ஆயில் மில் பகுதி வரை 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக சென்றனர். பின்னர் ஆயில் மில் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மாநாடு நடைபெற்றது. அதில் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கடன் தள்ளுபடி செய்து முதல் கையெழுத்து போட வேண்டும், இல்லையேல் விவசாயிகள் உங்களை தள்ளுபடி செய்வார்கள் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர். கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெறப்பட்ட பயிர் மற்றும் பண்ணைக்கடன்கள் முழுவதும் மத்திய, மாநில அரசுகள் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், பிப்ரவரியில் மதுரையில் கோரிக்கை மாநாடு நடத்தப்படும் எனவும் மாநாட்டில் தெரிவித்தனர்.
















