செஞ்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சர்ச்சைக்குரிய தருணம் உருவாகியுள்ளது. இந்த தேர்வு மையத்தில் மட்டும் 624 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், அதில் 167 பேர் வேதியியல் பாடத்தில் முழு மதிப்பெண் 100க்கு 100 பெற்றுள்ளனர்.
இந்த சாதனை மாணவர்கள் திறமையின் வெளிப்பாடா ? இல்லையெனில் ஏதாவது முறைகேடா ? என்ற சந்தேகம் கல்வி வட்டாரங்களிலும், பொதுமக்களிடையிலும் எழுந்துள்ளது. இந்த தேர்வு மையத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமன்றி, தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர்களும் தேர்வு எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மதிப்பெண் விபரங்கள் வெளியாகிய பிறகு, ஒரே மையத்தில் இவ்வளவு பேர் ஒரே பாடத்தில் முழு மதிப்பெண் பெறுவது சாத்தியமா ? எனக் கேள்விகள் எழுந்துள்ளன. இதனால், வேதியியல் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தாத ? என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் அறிவழகன் தெரிவித்ததாவது :
“தேர்வு மையத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள், மற்றும் சம்பந்தப்பட்ட கல்வி அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அரசுக்கு அறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் வினாத்தாள் கசியல் உள்ளிட்ட எந்தவித முறைகேடுகளும் இடம்பெறவில்லை என்றுதான் தற்போது வரை எங்களது நிலைமட்டம்.”
இன்னும் உறுதி செய்யப்படாத சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு தனி விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றன.