தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே இன்று (டிசம்பர் 18) நடைபெற்ற ‘மக்கள் சந்திப்பு’ பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது ஆளும் திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடிய அவர், “திமுக ஒரு தீயசக்தி, தவெக ஒரு தூயசக்தி” என்று கூறி தேர்தல் களத்தை அதிரவைத்துள்ளார்.
கூட்டத்தில் உரையாற்றத் தொடங்கிய விஜய், ஈரோட்டின் அடையாளமான மஞ்சளைப் பற்றி உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். “மஞ்சள் என்றாலே ஒரு தனி ‘வைப்’ தான். மங்களகரமான காரியங்களை மஞ்சளில் தொடங்குவது நம் பண்பாடு. நமது கட்சியின் கொடியிலும் அந்த ஆற்றல்மிக்க மஞ்சள் நிறம் இருக்கிறது. இந்த மஞ்சள் பூமியில் விவசாயத்திற்கு அரணாக விளங்கும் காலிங்கராயன் அணை மற்றும் கால்வாயை உருவாக்கிய காலிங்கராயரின் தியாகம் மகத்தானது. ஒரு மகனுக்கு அவனது தாய் கொடுக்கும் தைரியம் எதையும் சாதிக்க வைக்கும் என்பதற்கு காலிங்கராயன் வரலாறு சாட்சி. அந்தத் தாயின் தைரியத்தை இன்று என் மீது அன்பு வைத்துள்ள நீங்கள்தான் (மக்கள்) எனக்குக் கொடுக்கிறீர்கள்,” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தன்னைப் பற்றி பரப்பப்படும் அவதூறுகளுக்குப் பதிலடி கொடுத்த விஜய், “என்னை மக்களிடமிருந்து பிரிக்கச் சூழ்ச்சி செய்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாது, இந்த உறவு இன்று நேற்று வந்ததல்ல; நான் சினிமாவுக்கு வந்த 10 வயதிலிருந்து, கடந்த 33 ஆண்டுகளாகத் தொடரும் பந்தம் இது. நீங்கள் என்ன சூழ்ச்சி செய்தாலும் மக்கள் இந்த விஜய்யைக் கைவிட மாட்டார்கள்,” என முழங்கினார். மேலும், அண்ணாதுரை மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோர் தமிழகத்தின் சொத்து என்றும், அவர்களைப் பயன்படுத்துவதற்கு எவருக்கும் தனிப்பட்ட உரிமை கிடையாது என்றும் தெரிவித்தார்.
ஆளும் திமுக அரசை ‘தீயசக்தி’ என விளித்துப் பேசிய விஜய், அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளைக் கடுமையாக விமர்சித்தார். “நீட் ரத்து, கல்விக் கடன் ரத்து எனப் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்தார்கள். எப்போதும் ஒன்றைச் சொல்வது, இன்னொன்றைச் செய்வதுதான் இவர்களின் வழக்கம். நான் பேசுவதைச் சினிமா டயலாக் என்கிறார்கள். நான் எத்தனை நிமிடம் பேசினால் உங்களுக்கு என்ன? வாயில் வடை சுடுவதற்கு நாங்கள் திமுக அல்ல; தவெக” என்று சாடினார். மக்கள் நலத் திட்டங்களை ‘ஓசி’ என்று கூறி இழிவுபடுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் அண்மையில் “என் கேரக்டரை புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க” எனப் பேசியதைக் குறிப்பிட்டுப் பேசிய விஜய், “சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் பாதுகாப்பு இல்லாமை, பொய் வாக்குறுதி – இதில் எங்கே உங்கள் கேரக்டரை புரிந்துகொள்வது? என்னுடைய கேரக்டர் என்பது மக்களின் கேரக்டர். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் கேரக்டரே வேறாக இருக்கும். அதை நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டால் மக்கள் புரியவைப்பார்கள்” என சவால் விடுத்தார்.
“உங்களுக்கு நீங்கள் கொள்ளையடித்த பணம் துணை; எனக்கு என் மீது அன்பு வைத்துள்ள இந்த ‘மாஸ்’ (மக்கள்) தான் துணை. தீயசக்தியான திமுகவை வீழ்த்த மக்களாகிய உங்களால் மட்டுமே முடியும். வெற்றி நிச்சயம்” எனக்கூறி தனது உரையை நிறைவு செய்தார். கூட்டத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் விஜய்யின் பேச்சை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
















