சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு சவரன் தங்கம் ரூ.99,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தைகளில் முதலீட்டாளர்கள் மட்டுமின்றி பல நாடுகளும் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்து வருவதால், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. அதன் தாக்கமாக, இந்தியாவிலும் தங்க விலை நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டும் நிலை காணப்படுகிறது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில், கடந்த டிசம்பர் 15ஆம் தேதி ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.12,515க்கும், ஒரு சவரன் ரூ.1,00,120க்கும் விற்பனையானது. அதே நாளில் வெள்ளி ஒரு கிராம் ரூ.215க்கு விற்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 16ஆம் தேதி தங்க விலையில் திடீர் சரிவு ஏற்பட்டது. அன்றைய தினம் தங்கம் கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.12,350க்கும், சவரனுக்கு ரூ.1,320 சரிந்து ரூ.98,800க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.211 ஆக பதிவானது.
இன்றைய நிலவரம்
இந்த நிலையில், இன்று மீண்டும் தங்க விலை உயர்வு கண்டுள்ளது. 22 காரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.12,400க்கும், சவரனுக்கு ரூ.99,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை நெருங்கியுள்ளதால், நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வெள்ளி விலையில் புதிய உச்சம்
இதனிடையே, வெள்ளி விலை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ரூ.222க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 22 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

















