சென்னை நங்கநல்லூரில் “தமிழ்நாடு ஹஜ் இல்லம்” கட்டுவதற்கான பணிகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.
இஸ்லாமிய சமூகத்தினர், ஹஜ் பயணம் மேற்கொள்வதை அவர்களின் வாழ்நாள் கடமைகளில் ஒன்றாக கருதுகின்றனர். இவ்வாறு சென்னைக்கு வரும் இஸ்லாமியர்கள், ஹஜ் பயணம் செல்வதற்கு முன்னதாக, தங்கிச் செல்ல வசதியாக, தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என்று, மார்ச் மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில், நங்கநல்லூரில் ஒரு ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு 39 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில், ஹஜ் இல்லம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல்லை முதல்வர் ஸ்டாலின் நாட்டி வைத்தார். அப்போது, துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் நாசர், தா.மோ.அன்பரசன், தலைமை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தமிழ்நாடு ஹஜ் இல்லம், ஒரே சமயத்தில் 400 பேர்வரை தங்கும் வகையில், அடிப்படை வசதிகளுடன் மிகப்பிரம்மாண்டமாக கட்டப்படும் என, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















