திண்டுக்கல் மாவட்டம் ஓம் சாந்தி CBSE மேல்நிலைப்பள்ளியில் இன்று (03.12.2025) நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா – 2025 நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, மொத்தம் 280 பயனாளிகளுக்கு ரூ.93,67,115 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மீது தனிக் கவனம் செலுத்தி, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனியாக ஒரு துறையினை உருவாக்கி அத்துறையினைத் தமிழ்நாடு அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார். தொடர்ந்து, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை மற்ற குழந்தைகளுக்கு இணையாகச் சமுதாயத்தில் உயர்த்தும் நோக்கில் அரசு செயலாற்றி வருகிறது என்றும் அவர் கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் முதன்முதலாக உலக வங்கியின் ஒத்துழைப்போடு “தமிழ்நாட்டின் உரிமைகள்” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வீடுதோறும் சென்று மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கு அடையாள அட்டை, பஸ் பாஸ் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமுதாயத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை ஒரு அங்கமாக மாற்றும் நோக்கில், பெற்றோர்கள், பாதுகாவலர்கள், ஆசிரியர்கள் முழு அர்ப்பணிப்போடு செயலாற்றி வருவதைப் பாராட்டிய மாவட்ட ஆட்சியர், மாவட்ட நிர்வாகம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் இக்குழந்தைகளின் வாழ்வை மேம்படுத்த உரிய ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், இந்த நாள் முழுவதையும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான நாளாகக் கொண்டாட வேண்டும் என்றும் அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மொத்தம் 280 பயனாளிகளுக்கு, சுமார் ரூ.93 லட்சத்து 67 ஆயிரத்து 115 மதிப்பீட்டிலான உதவிகள் வழங்கப்பட்டன. இதில், தலா ரூ.1,01,800 மதிப்பீட்டில் 65 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனங்களும் (Retrifitted Petrol Scooters), 96 பயனாளிகளுக்கு செயலிகளுடன் கூடிய திறன்பேசிகளும் (Smart Phones), 50 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களும், 5 பயனாளிகளுக்கு ரியோ போல்ட் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளும், 20 பயனாளிகளுக்கு மடக்குச் சக்கர நாற்காலிகளும், 35 பயனாளிகளுக்குக் காதொலி கருவிகளும் மற்றும் 9 பயனாளிகளுக்கு மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்புச் சக்கர நாற்காலிகளும் அடங்கும்.
இந்த விழாவில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 26 நபர்களுக்குப் பரிசுத் தொகையினையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு. சி. தங்கவேலு, சமூக நல அலுவலர் திருமதி சா.காலின்செல்வராணி அவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
















