சென்னை மற்றும் புறநகர் பகுதியில், விட்டுவிட்டு மழை பெய்வதால், அலுவல் நிமித்தமாகவும், அத்தியாவசிய பணிக்காக வெளியே செல்வோரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
வங்க கடல் புயல் வலுவிழந்தாலும், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அதிகாலை முதலே, விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்திருப்பதால், சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. போரூர், அய்யப்பன்தாங்கல், பூந்தமல்லி சாலையில் மெட்ரோ ரயில் பாதை பணிகள் நடப்பதால், பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மோட்டார் வைத்து, தண்ணீரை வெளியேற்றினாலும், மழை தொடர்வதால் அந்த பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதேபோல், கோயம்பேடு, மதுரவாயல், வளசரவாக்கம் சுற்றுவட்டாரத்திலும், மழை காரணமாக போக்குவரத்துக்கு இடையேறு ஏற்பட்டுள்ளது. பிரதான சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் சூழல் காணப்படுகிறது. பாரிமுனையில் இருந்து பூந்தமல்லி நோக்கி செல்லும் சாலையில், இன்று காலை கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
இதனிடையே, அந்தமான் கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதால், போர்ட் பிளேயருக்கு விமானங்களை இயக்குவதில் சிக்கல் எழுந்திருக்கிறது. சென்னையில் இருந்து இயக்கப்படும் 6 விமானங்களில் சேவை தாமதம் ஆகியிருக்கிறது. இதனால், முன்பதிவு செய்த பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். வானிலை சீரடைந்த பிறகே, போர்ட் பிளேயருக்கு விமானங்கள் இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
















