இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் குவித்தது. விராட் கோலி 135 ரன்களும், கே.எல்.ராகுல் 60 ரன்களும், ரோகித் சர்மா 57 ரன்களும் அடித்தனர்.
பின்னர் 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மார்கோ ஜான்சன் 70 ரன்களும், பிரீட்ஸ்கே 72 ரன்களும், கார்பின் போஷ் 67 ரன்களும் எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடாததால் 49 புள்ளி 2 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 332 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் அதிகப்பட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

















