மயிலாடுதுறை மாவட்டத்தில் கடற்கரைகளில் 11 அடி வரை அலைஎழும்பும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்திருந்த நிலையில் சின்னங்குடி கடற்கரையில் தற்போது 5 அடி உயரம் வரை அலைகள் எழும்பி வருகிறது. படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக கட்டி வைத்துள்ளனர்.
டித்வா புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக கன மழை பெய்யும், கடற்கரைகளில் அலைகள் 11 அடி உயரம் வரை எழும்பும் என எச்சரிக்கப்பட்டு இருந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணி தொடங்கி பெய்து வந்த சாரல் மழை, இன்று அதிகாலை முதல் மிதமான மழையாக சற்று வலுப்பட்டு உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை 8:30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 25 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் தரங்கம்பாடியில் அதிகபட்சமாக 34 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சின்னங்குடி கடற்கரையில் அலைகள் ஐந்து அடி உயரம் வரை எழும்பி வருகிறது. மீனவர்கள் தங்களது படகுகளை கடற்கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி கட்டி வைத்துள்ளனர். தற்போதும் மிதமான மழை நீடித்து பெய்து வருகிறது.

















