மயிலாடுதுறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்:-
மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் இரண்டு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி மாணவி உதயநிதியின் உருவப்படத்தை அச்சு அசலாக வரைந்து அசத்தல்:-
துணை முதலமைச்சரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் 48-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகமெங்கும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை திமுகவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினர். மயிலாடுதுறையில் உள்ள அன்பகம் மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், இரண்டு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி மாணவி லட்சுமி என்பவர் தனது கால்களாலேயே உதயநிதியின் உருவப்படத்தை அச்சு அசலாக வரைந்து காண்பவர்களை வியப்பில் ஆழ்த்தினார். மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பழனிவேல் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பாக ஓவியம் வரைந்து மாணவர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட அரசு வழக்கறிஞர் சேயோன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதனை தொடர்ந்து, பல்லவராயன்பேட்டையில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளியில் தங்கிப் பயிலும் நரிக்குறவ மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. விளையாட்டு உபகரணங்களை பெற்றுக்கொண்ட நரிக்குறவ மாணவர்கள் உதயநிதிக்கு உற்சாகமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். இதில், ஒன்றிய செயலாளர் இமயநாதன், நகர்மன்ற தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


















