குடியிருந்து வரும் இடத்திற்கு பத்திரம் உள்ளது பட்டா எங்கே? என்று கேட்டு நான்கு வருடங்களாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் இன்று நடைபெற்ற தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்கான சிறப்பு குழு ஆய்வு கூட்டத்தில் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது:-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்கான சிறப்பு குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு குழு உறுப்பினரும் திருச்சி கிழக்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பங்கேற்று கூட்டத்தில் சிறுபான்மையிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காண்பதற்கான முன்னெடுப்புகள் தொடர்பாக விரிவாக ஆய்வு மேற்கொள்ள படுவதாகவும் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் சீர்காழி தாலுக்கா திருமயிலாடி ஊராட்சிக்கு உட்பட்ட மாங்கனாம்பட்டு உட்கிராமத்தில் புல எண்கள் 262 சி மற்றும் 262 பி-யில் குடியிருப்பவருக்கு பட்டா வழங்க கோரி கிராம மக்கள் மனு அளித்தனர். மூதாதையர்கள் காலத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த புல எண்களில் வசித்து வருவதாகவும் தாங்கள் வசித்து வரும் இடத்திற்கு அனைவரிடமும் பத்திரங்கள் உள்ளது. ஆனால் பட்டா இல்லை. பட்டா வேண்டும் என்று கேட்டு வருவாய்த்துறையினரை தொடர்பு கொண்ட போது நில வரைபடம் எங்கள் அலுவலகத்தில் இல்லை தொலைந்து போய்விட்டது, கிராம நிர்வாக அலுவலகத்திலும் அடங்கலும் இல்லாததால் பட்டா கொடுக்க முடியாது என்று கூறிவிட்டனர். இதனால் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு வங்கிக் கடனும் தங்கள் வாரிசுகளுக்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில் உரிமை மாற்றம் செய்யவோ முடியவில்லை. பட்டா இல்லாமல் எந்தவித சொத்து பரிமாற்றமும் செய்ய முடியாது என்ற நிலை உள்ளதால் நாங்கள் வசிக்கும் திருமயிலாடி மாங்கனாம் பட்டு கிராமம் 262 சி மற்றும் 262b புல எண்களில் எங்களுக்கு பட்டா வழங்க ஆவண செய்து தரும்படி வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வேளாண்மை உழவர் நலத்துறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சீர்காழி எம்எல்ஏ உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நான்கு ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை எடுப்பதாக கூறும் அதிகாரிகள் பணியிடம் மாற்றமாகி செல்வதால் தாங்கள் மீண்டும் மீண்டும் மனு அளிக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் உடனடியாக தங்களுக்கு உரிய புல எண்களில் பட்டா வழங்க ஆவணம் செய்து தரும்படி கோரிக்கை விடுத்து மனு அளித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கேட்டுக் கொண்டுள்ளனர். சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வத்திடம் மனு அளித்ததன் பேரில் எம்எல்ஏவும் நில உடமையாளர்களுக்கு விடுபட்ட பட்டாக்களை நில அளவை செய்து புதிய பட்டா வழங்க வேண்டும் என்று வட்டாட்சியருக்கு கடிதம் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.
கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்கான சிறப்பு குழு உறுப்பினரும் திருச்சி கிழக்கு சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் நடவடிக்கை எடுக்கிறேன் என்று நம்பிக்கை அளித்துள்ளதால் பட்டா கிடைக்கும் என்ற நம்பிக்கையில் செல்கிறோம் என்று மாங்கனாம்பட்டு கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.

















