ஈரோடு மாவட்டம் ஜெயராமபுரம் மொடக்குறிச்சியில் அமைக்கப்பட்ட மாவீரன் பொல்லான் முழு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பின்னர் ஈரோடு சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 235 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பில் சோலார் பேருந்து நிலையம் உட்பட மொத்தம் 790 முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தார். மேலும், 91 கோடியே 9 லட்ச ரூபாய் மதிப்பில் 23 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதோடு, 1,84,491 பயனாளிகளுக்கு 278 கோடியே 62 லட்ச மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. மொத்தத்தில் 605 கோடியே 44 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மக்களிடம் சென்றடைந்தன.
விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த நான்கு ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்திற்காக 9,327 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்தார். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த அனைத்துத் திட்டங்களும் வரும் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.
அதே நேரத்தில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியுள்ளவர்களாக இருந்தும் பெயர் பதிவு நேரத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கான புதிய அறிவிப்பையும் வெளியிட்டார். வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல், அத்தகைய பயனாளிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தார். திமுக அரசு வழங்கிய தேர்தல் அறிவிப்புகளை ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
பின்னர் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்த முதல்வர்ஸ்டாலின், தமிழகத்தின் வளர்ச்சி தொடர்பான திட்டங்களை நிராகரிக்கும் போது மத்திய அரசு “கம்பி கட்டும் கதை” கூறுகிறது என சாடினார். பாஜக ஆட்சிக்காலத்தில்தான் பஹல்காம் தாக்குதல் மற்றும் செங்கோட்டை தாக்குதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றதாகவும், வரி வசூலிக்கும்போது தமிழகத்தை பயன்படுத்திக் கொள்ளும் மத்திய அரசு, நிதி வழங்கும் போது மாநிலத்தை புறக்கணிக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். திமுக அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான நெருக்கத்தை சிதைக்க முயற்சிகள் நடக்கின்றன என்றார்.
விழாவின் முடிவில், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இருப்பதை ஒவ்வொருவரும் சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று பொதுமக்களிடம் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
















