மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் ஆலாலசுந்தரம் ஊராட்சிக்கு உட்பட்ட திருஞானசம்பந்தம் கிராமத்தில் 150 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அப்பகுதி விளைநிலங்களுக்கு நடுவே உள்ள இடத்தில் மயானம் அமைந்துள்ளது. கிராமத்தில் இருந்து மயானத்திற்கு செல்வதற்கு இதுவரை சாலை வசதி இல்லை. கிராமத்தில் இறப்பு ஏற்படும் போதெல்லாம் மயானத்தைச் சுற்றி உள்ள தனியார் விளைநிலங்கள் வழியே கடும் சிரமத்துடன் இறந்தவரின் உடலை கொண்டு சென்று இறுதி சடங்கு செய்யும் அவல நிலையே நீடிக்கிறது. இன்று ஆலாலசுந்தரம் ஊராட்சிக்கு உட்பட்ட திருஞானசம்பந்தம் கிராமத்தில் உடல்நிலை சரியில்லாமல் உயிரழந்த கனகராஜ் (72) உடலை மயானத்திற்கு கொண்டு செய்வதற்கு அப்பகுதியில் உள்ள சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்களில் இறங்கி சேறும் சகதியிலும் கடும் சிரமத்துடன் கிராம மக்களும் உறவினர்களும் சுமந்து சென்றனர். இந்த காட்சிகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கிராம மக்கள் எத்தனை ஆண்டுகள் கடந்தும் தங்கள் கிராமத்தில் மயானத்திற்கு சாலை வசதி கூட ஏற்படுத்தி தரப்படவில்லை என கவலையுடன் தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் கிராமத்தின் மயானத்திற்கு சாலை அமைத்து தர வேண்டுமெனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
















