மயிலாடுதுறையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் அலுவலகமான காமராஜர் மாளிகையில் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜகுமார் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஒடிசா மாநில முன்னாள் தலைவர் சரத் பட்நாயக் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மாவட்ட அளவில் நிர்வாகிகளிடம் விபரங்களை கேட்டறிந்து பேசுகையில், அகில இந்திய அளவில் காங்கிரஸ் கமிட்டியை கீழ்மட்ட அளவில் பலப்படுத்தும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் அமைப்பு மறுசீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளராக என்னை நியமித்துள்ளதால் மாவட்ட அளவில் பொறுப்புக்கு வர விரும்புபவர்கள் படிவங்களை பெற்றுகொண்டு அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து அனைத்து மக்களும் ஆதரிக்கும் வகையில் கட்சியை பலப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள உள்ளோம். நவ.29-ஆம் தேதி வரை மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் நிர்வாகிகளை சந்தித்து ஆய்வு செய்ய உள்ளோம். கட்சி வளர்ச்சி, மாவட்ட பொறுப்புகளுக்கு வர விரும்புபவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றார். இதில் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் பழனிசாமி, பொதுச்செயலாளர்கள் அருணாச்சலம், கணபதி சிவக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

















