செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவம் தற்கொலைப்படைத் தாக்குதல் என உறுதி செய்யப்பட்ட நிலையில், அதற்கான விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தாக்குதலை மேற்கொண்டதாக கருதப்படும் ஜம்மு–காஷ்மீரைச் சேர்ந்த டாக்டர் உமரின் தொடர்புகளைத் துருவி அறியும் பணியில் அமலாக்கத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பல்கலைக்கழக நிறுவனர் மீது ED சோதனைகள்
டாக்டர் உமர் பணியாற்றியிருந்த ஹரியானா ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஜாவேத் அஹமது சித்திக் சட்டவிரோத நிதி பரிமாற்ற வழக்கில் இன்று ED அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது வீடு, அலுவலகம் மற்றும் பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான அறக்கட்டளைகளில் நடந்த சோதனைகளில்:
ரூ.48 லட்சம் ரொக்கம், பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள், நிதி தொடர்பான ஆவணங்கள் என பல ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அறக்கட்டளையின் நிதி சட்டத்திற்கு புறம்பாக ஜாவேத் சித்திக்கின் குடும்பத்தினருக்கும் அவர்களின் நிறுவனங்களுக்கும் மாற்றப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று ED கூறியுள்ளது.
கடந்த 10ம் தேதி மாலை செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஹூண்டாய் i20 கார் வெடித்ததில் :
10 பேர் உயிரிழந்தனர்,32 பேர் காயமடைந்தனர், 13 வாகனங்கள் தீப்பற்றின, இந்த வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் பயங்கரவாத அமைப்புகளின் பங்களிப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஆரம்பத்திலிருந்தே வலுத்து வந்தது.
உமருக்கு உதவி செய்தவர்களில் தொடர்ச்சியான கைது
உமருக்கு கார் வழங்கிய அமீர் ரஷித் அலியை சில நாட்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து பலரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இப்போது பல்கலைக்கழக நிறுவனரின் கைது, டெல்லி வெடிப்பு வழக்கில் பண ஆதரவு வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை, நிதி பரிமாற்றங்கள் மூலம் பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டதா என்பதை ஆழமாக விசாரித்து வருகிறது.

















