புதுடில்லி: டில்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பின்னால், மூன்று குற்றவாளிகள் இணைந்து ரூ.20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைத்தது என்ஐஏ விசாரணையில் வெளிச்சம் பெற்றுள்ளது.
நவம்பர் 10 ஆம் தேதி டில்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
விசாரணையின் போது கைது செய்யப்பட்டுள்ள டாக்டர் முசம்மில், டாக்டர் அதீல் மற்றும் டாக்டர் ஷாஹீன் ஆகியோர், குருகிராம் மற்றும் நுஹ் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நிதி திரட்டி, அதனை சதிகாரன் உமரிடம் கையளித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் 20 குவிண்டால் உரத்தை சுமார் ரூ.3 லட்சம் மதிப்பில் வாங்கியதும், அதன் பின்னர் உமருக்கும் முசம்மிலுக்கும் இடையே பணத் தகராறு ஏற்பட்டதுமாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், உமர் “சிக்னல்” செயலியின் மூலம் 2 முதல் 4 பேர் கொண்ட குழுவை அமைத்து, நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேநேரம், கார் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது உமர் என்பதும் டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மொத்தம் எட்டு பேர் இணைந்து, நான்கு இடங்களில் குண்டு வைக்கும் திட்டம் தீட்டியிருந்ததாகவும் NIA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கான்பூரை சேர்ந்த மருத்துவ மாணவர் முகமது ஆரிப் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர் காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தை சேர்ந்தவர். டில்லியில் கடந்த மூன்று மாதங்களாக படித்து வந்த அவர், தினமும் கல்லூரிக்கு வருகை புரிந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

















