ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில், இரண்டு காவலாளிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீசார் இன்று முக்கிய குற்றவாளியை சுட்டுப்பிடித்துள்ளனர்.
சேத்தூர் ஜமீன் தேவதானத்துக்குச் சேர்ந்த இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இயங்குகிறது. இக்கோவிலில் இரவு காவல்பணியில் இருந்த பேச்சிமுத்து மற்றும் சங்கரபாண்டியன் ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவில் வெட்டுக்காயங்களுடன் மரணமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
காலை பணிக்கு வந்த மற்றொரு காவலாளி மாடசாமி இந்த இருவரின் உடலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவிலுக்குள் உள்ள சிசிடிவி கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டு, டி.வி.ஆர் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும், உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் சான்றுகளை சேகரித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.
தொடர்ந்து, தனிப்படை போலீசார் வடக்கு தேவதானத்தைச் சேர்ந்த கணேசன் மகன் நாகராஜ் என்பவரை கைது செய்தனர். திருடப்பட்ட பொருட்களை மீட்கும் பொருட்டு, குற்றவாளியை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றபோது, அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து எஸ்.ஐ கோட்டியப்பசாமியை தாக்கி தப்ப முயன்றார்.
இதையடுத்து, உடன் இருந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் தற்காப்பு நடவடிக்கையாக நாகராஜை காலில் சுட்டார். காயமடைந்த நாகராஜும், எஸ்.ஐ கோட்டியப்பசாமியும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
போலீசார், இவ்வழக்கில் மேலும் சிலர் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுவதாகவும், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


















