நடிகை திரிஷாவின் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என கூறி மீண்டும் மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் காவல்துறையினர் விரைவான சோதனையை மேற்கொண்டனர்.
சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று வந்த மின்னஞ்சலில், “திரிஷா வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளோம்; அது சில நிமிடங்களில் வெடிக்கும்” எனக் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்பநாய்களுடன் திரிஷா இல்லம் சுற்றிலும் தீவிர சோதனைகள் நடத்தினர்.
ஆனால் பின்னர் அது வெறும் மிரட்டல் மெயிலாகவே இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதேபோன்று கடந்த மாதம் திரிஷாவுடன் சேர்த்து இயக்குனர் மணிரத்னம், நடிகர் விஷால், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அலுவலகங்களுக்கும் இதே போன்று வெடிகுண்டு மிரட்டல்கள் வந்திருந்தன. அவற்றும் சோதனையில் புரளி என தெரியவந்தது.
கடந்த சில வாரங்களாக சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு தினமும் வெடிகுண்டு மிரட்டல் மெயில்கள் வந்து வருவது அதிகாரிகளை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. ரஜினிகாந்த், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமெரிக்க மற்றும் ரஷ்ய தூதரகங்களுக்கும் இதேபோன்ற மிரட்டல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
ஒரே நபர் தொடர்ந்து இம்மெயில்களை அனுப்புகிறாரா அல்லது ஒரு குழுவா என்பதில் போலீசார் குழப்பமடைந்துள்ளனர். போலியான மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் VPN தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் அனுப்புநரின் இருப்பிடத்தை கண்டறிவது கடினமாக உள்ளது.
இந்நிலையில், மிரட்டல் மெயில் அனுப்பிய நபரை கண்டறியும் பணியில் சைபர் கிரைம் பிரிவு தீவிரமாக செயல்படுகிறது. அவரின் அடையாளம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலீசார் தெரிவித்ததாவது: “அந்த நபரை பிடித்தவுடன், தொடர்ந்து நடக்கும் இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்றனர்.















