தமிழ்நாட்டில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (Special Intensive Revision) பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் முக்கியத்துவத்தை பொதுமக்கள் அறிந்து கொண்டு, தகுந்த ஒத்துழைப்பு அளிக்கும் பொருட்டு, தேனி மாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேனி மாவட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர், திரு. ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள், தேனி-அல்லிநகரம் நகராட்சி கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையத்தில் இன்று (07.11.2025) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகங்களைத் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இந்தத் தீவிர திருத்தப் பணிகள், வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை நீக்குவதற்கும், இடம்பெயர்ந்த வாக்காளர்களைச் சரிபார்ப்பதற்கும், மீண்டும் பெயர்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கும் அவசியமானதாகக் கருதப்படுகிறது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் நகரமயமாதல் போன்ற காரணங்களால் மக்கள் அடிக்கடி இடம் மாறுவதால், பழைய இடத்தில் பெயரை நீக்காமல் புதிய இடத்தில் பதிவு செய்யும் நிலை உருவாகிறது. இதனால், மறுபடியும் பெயர்கள் இடம்பெற வாய்ப்பு அதிகரிப்பதைத் தவிர்க்க இந்தத் தீவிர சரிபார்ப்பு நடவடிக்கை அவசியமாகிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைமுறைக்கு வரப்பெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் 04.11.2025 முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் (Booth Level Officer – BLO) இல்லம் தோறும் சென்று, கணக்கெடுப்புப் படிவம் விநியோகம் செய்யப்பட்டு, சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வீதி நாடகங்கள் வாயிலாக, வாக்காளர் தீவிர திருத்தப் பணியின் முக்கியத்துவம், வாக்காளர் உதவி மையத் தொலைபேசி எண்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு அளிப்பது குறித்துப் பொதுமக்களுக்கு மிக எளிமையாக எடுத்துரைக்கப்பட்டது. இதன் மூலம், வாக்காளர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்குத் துல்லியமான தகவல்களை அளித்து, பிழையற்ற வாக்காளர் பட்டியலை உருவாக்க உதவ வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டது.
இந்நிகழ்வில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு. நல்லதம்பி, தேனி-அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் செல்வி பார்கவி, வட்டாட்சியர் திரு. சதீஸ்குமார் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகளும் அலுவலர்களும் கலந்து கொண்டனர். வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் விடுபட்டுள்ளதா, அல்லது பிழைகள் உள்ளனவா என்பதைச் சரிபார்த்து, தகுந்த படிவங்களைப் பயன்படுத்தி திருத்தங்களை மேற்கொள்ள வாக்காளர்களை மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. இந்தச் சிறப்புத் திருத்தப் பணிகளின் மூலம் 100% பிழையற்ற வாக்காளர் பட்டியல் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


















