மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் அமைந்துள்ளது.இந்த 24 வார்டு பகுதியில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக கட்டடங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் சீர்காழி நகராட்சி நிரந்தர தூய்மை பணியாளர்கள், மற்றும் தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மூலம் நாள்தோறும் சேகரிக்கப்பட்டு குப்பை கிடங்கில் கொண்டு கொட்டப்படுகிறது.
இதனிடையே தனியார் ஒப்பந்ததாரர் மூலம் 72 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் தனியார் ஒப்பந்ததாரர் ஒப்பந்த பணி எடுத்து 72 தூய்மை பணியாளர்கள் உதவியுடன் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூய்மை பணியாளர்களுகான
இ.பி.எப். ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 12 சதவீதமும், ஒப்பந்ததாரர் 13 சதவீதமும் அரசுக்கு கட்ட வேண்டும் என்பது விதிமுறை.ஆனால் ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட 12 சதவீத பிடித்தத்தை இரண்டு மாதம் மட்டுமே தனியார் ஒப்பந்ததாரர் அரசுக்கு கட்டியதாகவும், ஒப்பந்ததாரர் கட்ட வேண்டிய 13 சதவீதம் தொகை கட்டாமல் விடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனை அறிந்த தற்காலிக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிகளைப் புறக்கணித்து நகராட்சி அலுவலக வாசலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் நகரில் பிரதான பகுதிகளில் குப்பைகள் மலைபோல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இதுவரை நகராட்சி ஆணையரோ, நகர மன்ற தலைவரோ மற்றும் வேறு எந்த அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்த வரவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.
உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் போராட்டத்தை தொடர்வோம் எனவும் தூய்மை பணியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
















