அடுத்தாண்டு நடைபெறவுள்ள இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், ரசிகர்களின் இதய தளபதியுமான மகேந்திர சிங் தோனி மீண்டும் களமிறங்கப் போவதாக சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த சீசனில் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் முடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தொடக்க கட்டத்தில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியதால், மீண்டும் தோனியே அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். ஆனால் அவரது தலைமையிலும் சென்னை அணிக்கு பெரிய வெற்றி தொடரை பெற முடியவில்லை.
இதனையடுத்து, தோனி ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறப் போகிறாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டது. கடந்த சீசன் முடிந்தபின் தோனி, “ஓய்வு குறித்து முடிவெடுப்பதற்கு இன்னும் நேரம் உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், “தோனி இன்னும் ஓய்வு பெறவில்லை. அவர் அடுத்தாண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார்” என உறுதியாக தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், உலகம் முழுவதும் உள்ள தோனி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். “மீண்டும் நம்ம தலா களமிறங்கப் போறாரு!” என ரசிகர்கள் உற்சாகக் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
















