சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் அரசியல் திசை குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் உரையாற்றிய விஜய், முதல்வர் ஸ்டாலினை நேரடியாக குறிவைத்து கடுமையாக விமர்சித்தார். “நாம் வேதனையில் அமைதி காத்திருந்த நேரத்தில், சட்டசபையில் முதல்வர் நமக்கு எதிராக வன்ம அரசியல் செய்தார். நம்மை விமர்சிக்கும் விதமாக பேசினார். நமது வேதனையை அரசியலாக மாற்றி விட்டார்கள்,” என்று விஜய் குற்றம்சாட்டினார்.
அவர் மேலும் கூறியதாவது:
“கரூர் துயரச் சம்பவத்தில் நம் கட்சி உறுப்பினர்கள் உயிரிழந்தபோது, நாம் அமைதியாக இருந்தோம். ஆனால் அந்த நேரத்தில் நம்மீது அர்த்தமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அதே சமயம், உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் நடவடிக்கைகளை கடுமையாக கண்டித்தது. திமுக சார்பாக வாதம் செய்த வழக்கறிஞர்கள் கூட பதில் சொல்ல முடியாத நிலையில் நின்றார்கள். அதிகார மமதையில் ஆடும் ஆட்சியாக திமுக மாறி விட்டது,” என்றார்.
அதே நேரத்தில், 2026 தேர்தலை குறித்தும் விஜய் உறுதியாகப் பேசினார்:
“அடுத்த தேர்தலில் போட்டி இரண்டு பேருக்கே இடம் பெறும் – ஒன்று திமுக, மற்றொன்று தவெக. மக்கள் ஸ்டாலினுக்கும் திமுகவிற்கும் சரியான பாடம் கற்பிப்பார்கள்,” என்று விஜய் கூறினார்.
இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அதில்,
தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என்பதற்கான தீர்மானம்,
வரவிருக்கும் தேர்தலில் கூட்டணிகள் குறித்து முடிவு எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்குவது,
என முக்கியமான பிரேரணைகள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இதனுடன், தவெக கட்சி விஜய் தலைமையில் 2026 தேர்தலை சந்திக்கும் என்றும் உறுதி செய்யப்பட்டது.
இத்தீர்மானங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை கிளப்பி உள்ளன.
















