மயிலாடுதுறை அருகே மாதிரிமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி குழாய் பதிப்பு பணிக்கான நடவடிக்கைளை தடுத்த நிறுத்த வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரின் குறைதீர்க் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் கிராமமக்கள் மனு அளித்தனர். மாதிரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சிற்றரசு மற்றும் சிலர் அளித்த மனுவில், மாதிரிமங்கலம் கிராமத்தில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே ஓஎன்ஜிசி நிறுவனத்தால், கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எந்த அரசுத்துறை அனுமதியும் பெறாமல் இயற்கை எரிவாயு குழாய் பதிக்கப்பட்டிருந்தது. அது பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவகையில் இருந்ததால் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் அகற்றப்பட்டது. தற்போது ஓஎன்ஜிசி நிறுவனம் எந்த அரசு துறையின் அனுமதியும் பெறாமல் மீண்டும் குழாய் பதிப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் சென்று கொண்டிருக்கும் நிலையில், ஆற்றுக்கரையில் துளையிட்டு குழாய் பதிப்பதால் பொதுமக்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து கவனம் செலுத்தி, ஓஎன்ஜிசி நிறுவனத்தின் குழாய் பதிப்பு பணிக்கான ஏற்பாடுகளை தடுத்து நிறுத்தவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

















