மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 2வது அரையிறுதிப் போட்டியில் ஏழு முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 338 ரன்கள் குவித்தது. மகளிர் ஒருநாள் போட்டிகளில் இத்தகைய பெரிய இலக்கை துரத்துவது கடினம் என்பதே பொதுவான நம்பிக்கை. ஆனால் அந்த நம்பிக்கையை முறியடித்து இந்திய அணி நம்பமுடியாத வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இதுவரை ஒருநாள் போட்டிகளில் 331 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலியாவே துரத்தி வென்றிருந்தது. அந்த சாதனையையே இந்திய அணி முறியடித்து 339 ரன்களை அடைந்து வெற்றியை கைப்பற்றியது. இதன்மூலம் சேஸிங் வரலாற்றில் புதிய பக்கம் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 2022 முதல் 2025 வரை தொடர்ந்து 15 போட்டிகளில் வெற்றிபெற்று வந்த ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றி நேற்றுடன் முடிவடைந்தது.
இந்திய அணிக்காக ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் இருவரும் அபாரமான ஆட்டம் வெளிப்படுத்தினர். 25 வயதான ஜெமிமா 134 பந்துகளில் 127 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் நின்றார். அவருடன் இணைந்த ஹர்மன்பிரித் 89 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப்பாதையில் நகர்த்தினார். 2017 உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 171 ரன்கள் அடித்த அதே ஹர்மன்பிரித், மீண்டும் அதே தீவிரத்துடன் விளையாடி இந்தியாவை 2017க்குப் பிறகு முதல்முறையாகவும், மொத்தம் மூன்றாவது முறையாகவும் உலகக் கோப்பை இறுதிக்குக் கொண்டு சென்றுள்ளார்.
இந்திய அணியின் அசாதாரண வெற்றிக்காக முன்னாள் மற்றும் இன்றைய ஜாம்பவான்கள் பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர் தனது சமூக ஊடகப் பதிவில், “அற்புதமான வெற்றி! முன்னணியில் இருந்து வழிநடத்திய ஜெமிமா மற்றும் ஹர்மன்பிரித்துக்கு வாழ்த்துகள். ஸ்ரீசரணி, தீப்தி சர்மா ஆகியோரின் பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது. மூவர்ணக் கொடியை உயரப் பறக்க விடுங்கள்!” எனப் பாராட்டியுள்ளார்.
முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, “இந்திய அணியின் வெற்றி, நாட்டில் விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கான சான்றாகும்” எனக் கூறியுள்ளார். அதேபோல் கவுதம் காம்பீர் “இது இன்னும் முடிவடையவில்லை! அவர்களின் ஆட்டம் நம்பமுடியாதது” எனக் குறிப்பிட்டுள்ளார். ’ஹிட்மேன்’ ரோகித் சர்மா “சபாஷ் டீம் இந்தியா!” என பெருமிதம் தெரிவித்தார்.
யுவராஜ் சிங் தனது வாழ்த்தில், “அழுத்தத்தின் கீழ் ஹர்மன்பிரித்தின் அமைதி, ஜெமிமாவின் கவனம், இருவரும் இந்தியா எதற்காக நிற்கிறது என்பதை உலகத்துக்கு காட்டியுள்ளனர். இது வெறும் ஒரு வெற்றியல்ல, வரலாற்றில் நிலைக்கும் சாதனை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வெற்றி வெறும் அரையிறுதி வெற்றியல்ல; மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா எழுதிய புதிய அத்தியாயம். சமூக ஊடகங்களில் #TeamIndiaWomen மற்றும் #JemimahRocks என்ற ஹாஷ்டேக்குகள் ட்ரெண்டாகி, ரசிகர்கள் வீதிகளில் கொண்டாட்டம் நடத்தி வருகின்றனர். இந்திய மகளிர் அணியின் தைரியம், உறுதி மற்றும் நம்பிக்கையை உலகம் முழுவதும் இன்று பாராட்டி வருகின்றது.
 
			















