சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன இறக்குமதி வரிகளை 57% இலிருந்து 47% ஆகக் குறைத்ததாக அறிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில், நீண்ட நாட்களாக நிலவி வந்த Rare Earth பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவின் புசானில் நடைபெற்ற சந்திப்பிற்குப் பிறகு ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “அரிய மண் மீதான சீனாவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் தொடரும் — இது மிகவும் முக்கியமானது” என்று கூறினார். மேலும், சீனா அதிக அளவில் சோயாபீன்களை வாங்கத் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா, பெய்ஜிங்கிற்கு எதிராக இருந்த ஃபெண்டானில் கட்டணத்தை 20% இலிருந்து 10% ஆகக் குறைக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.
அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஒரு வருட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. Rare Earth மீதான ஏற்றுமதி தடைகள் தொடர்பாக இரு நாடுகளும் பரஸ்பர ஒப்பந்தத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் மேலும், “Rare Earth மீதான தடைகள் குறுகிய காலத்தில் முடிவடையும்; இரு நாடுகளும் இதற்கான நிலையான தீர்வை நோக்கி நகர்கின்றன,” என்று கூறினார்.
முன்னதாக, 2025 APEC உச்சிமாநாட்டிற்கு முன்னதாக புசானில் நடைபெற்ற சந்திப்பில், அமெரிக்கா–சீனா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் உருவாகும் வாய்ப்புகள் உள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
இரண்டாவது முறை பதவியேற்ற பின்னர் பல நாடுகளுக்கு மீதும் பல்வேறு வகையான வர்த்தக வரிகளை விதித்திருந்த டிரம்ப், சீனாவின் Rare Earth ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 100% வரி விதிப்பதாக எச்சரித்திருந்தார்.
எனினும், தற்போதைய பேச்சுவார்த்தையால் அந்த கடுமையான நடவடிக்கைகள் தவிர்க்கப்பட்டு, இரு நாடுகளும் ஒத்துழைப்பைத் தொடங்கியுள்ளன.

















