மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது.இந்தக் கூட்டுறவு கடன் சங்கத்தில் வைத்தீஸ்வரன்கோவில், மருவத்தூர்,திருப்புன்கூர், கற்கோயில், புங்கனூர் கன்னியாகுடி, கதிராமங்கலம், கொண்டத்தூர், பெருமங்கலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள சேர்ந்த விவசாயிகள் பயிர் கடன் மற்றும் உரங்கள் வாங்கி பயனடைகின்றனர். தற்போது மேற்கண்ட கிராமங்களில் சுமார் 5,000 ஏக்கரில் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு பணிகள் மேற்கொண்டுள்ளனர். சம்பா நடவு பயிருக்கு ஒரு வார காலத்திலும், நேரடி விதைப்புக்கு 20 நாட்களிலும் பயிர் வளர்ச்சிக்கு டி.ஏ.பி., யூரியா, அடி உரம் இட வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர். கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 1 வாரமாக யூரியா உரம் இல்லாமல் விவசாயிகள் அலைக்கழிக்கும் சூழல் உள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் இன்று கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளர் இது குறித்து முறையிட்டனர். அப்போது உரங்கள் வந்தும் முறையாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுவதில்லை என குற்றம் சாட்டிய விவசாயிகள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திடீரென கூட்டுறவு கடன் சங்கம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


















