அவிநாசி – மன வளர்ச்சி குன்றிய 16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அ.தி.மு.க. கவுன்சிலரின் கணவரும், அ.தி.மு.க. கிளைச்செயலாளருமான ராஜேந்திரன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடமாடும் தையல் தொழிலாளியின் மகளான 16 வயது மனநலம் குன்றிய சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, அவிநாசி நகராட்சி 12வது வார்டு அதிமுக கவுன்சிலரான சாந்தியின் கணவரும் பைக் ஒர்க்ஷாப் நடத்தி வரும் அதிமுக 12 வது வார்டு கிளைச் செயலாளருமான ராஜேந்திரன் (51) மீது சிறுமியின் பெற்றோர் அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஊத்துக்குளி பகுதியில் தலைமறைவாக இருந்த ராஜேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் சிறுமியின் பெற்றோரை மிரட்டியதாக பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் மூர்த்தி (52) என்பவர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அவிநாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
			

















