கரூர் : கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த ரமேஷின் மனைவி சங்கவி, நடிகர் விஜய் நேரில் ஆறுதல் தெரிவிக்காததால், அவர் வழங்கிய 20 லட்சம் ரூபாயை திருப்பி அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் கோடங்கிபட்டியை சேர்ந்த ரமேஷ், செப்டம்பர் 27 அன்று நடிகர் விஜய் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டபோது கூட்ட நெரிசலில் உயிரிழந்தார். பின்னர், ரமேஷின் குடும்பத்திற்கு தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் சார்பில் 20 லட்சம் ரூபாய் நிதி வங்கி வழியாக வழங்கப்பட்டது.
இதையடுத்து, அண்மையில் மாமல்லபுரம் அருகேயுள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில், அந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்தித்து ஆறுதல் கூறினார். ஆனால், ரமேஷின் மனைவி சங்கவி அந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில், தன்னுடைய அறிவில்லாமல் உறவினர்கள் மூவரை (ரமேஷின் அக்கா, அக்கா கணவர், மற்றும் சித்தப்பா) சென்னை அழைத்து சென்றதாக சங்கவி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், விஜய் நேரில் வந்து ஆறுதல் தெரிவிக்காததால் வருத்தமடைந்த தாம், பெற்ற ரூ.20 லட்சம் நிதியையும் ஆர்டிஜிஎஸ் வழியாக திருப்பி அனுப்பியதாக தெரிவித்தார்.
“எனக்கு பணம் தேவையில்லை. என் கணவரை இழந்த துயரில், விஜய் நேரில் வந்து ஆறுதல் சொல்வார் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அவர் வரவில்லை. அதனால் அந்த தொகையை திருப்பி அனுப்பியுள்ளேன்,” என்று சங்கவி செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த சம்பவம், கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை மீண்டும் ஒருமுறை சமூக வலைதளங்களில் விவாதத்திற்குள்ளாக்கியுள்ளது.
















