சென்னை : கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்ட நிலையில், தவெக தலைவர் விஜய் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு அறைக்கும் சென்று அஞ்சலி செலுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரூரில் நிகழ்ந்த துயரச்சம்பவத்தில் 37 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 235 பேர், நேற்று கரூரிலிருந்து தவெக நிர்வாகிகள் ஏற்பாடு செய்த சொகுசு பேருந்துகளில் மாமல்லபுரத்திற்கு அழைத்துவரப்பட்டனர். ரிசார்ட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இன்று காலை உணவுக்குப் பிறகு, விஜய் ஒவ்வொரு அறைக்கும் சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த இறந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், குடும்பத்தினருடன் நேரடியாக சந்தித்து பேசினார். காலை தொடங்கிய இந்த சந்திப்பு மாலை வரை நீடிக்கும் என கூறப்படுகிறது. மாலை நேரத்தில் குடும்பத்தினர் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்காக ஆம்னி பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன.
இந்த விஜயின் சந்திப்பு முன்கூட்டியே ரகசியமாக திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது. மாமல்லபுரம் சென்றதும் அவர் இருப்பிடம் பற்றிய தகவலும் சஸ்பென்ஸ் நிலையில் வைக்கப்பட்டது.
கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது வங்கிக் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அந்த குடும்பங்களை விஜய் தத்தெடுப்பதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா முன்பு தெரிவித்திருந்தார்.
இன்று விஜய் குடும்பத்தினரிடம் கல்விச் செலவு, திருமணச் செலவு, வீட்டுக் கடன் உள்ளிட்ட தேவைகளை கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்த நிலையில், 110 பேருக்கு அந்த தொகை வழங்கப்பட்டதா என்பது உறுதி செய்யப்படவில்லை.
விஜய் சந்திப்பின் போது உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், கரூரில் நேரடியாக சென்று ஆறுதல் கூறாமல், குடும்பத்தினரையே மாமல்லபுரத்திற்கு அழைத்து சந்தித்தது குறித்து சிலர் விமர்சனமும் எழுப்பி வருகின்றனர்.
இதுவரை தமிழ்நாடு அரசியலிலும் சமூகத்திலும் இதுபோன்ற முறையில் ஆறுதல் சந்திப்பு நடந்தது இல்லையென குறிப்பிடப்படுகிறது. இதற்கான காரணத்தை விஜய் குடும்பத்தினரிடம் நேரடியாக விளக்கியிருக்கக்கூடும் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
			

















