மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ஐயாபிள்ளை. கூலி வேலை செய்யும் அய்யா பிள்ளை மாடு வளர்த்து வருகிறார். மாடு சமீபத்தில் கன்றுகுட்டி ஈன்றுள்ளது. இந்த கரவை மாடு இன்று மேய்ச்சலுக்கு சென்றுள்ளது. இரவு வெகு நேரமாகியும் மாடு வீடு திரும்பாததால் ஐயா பிள்ளையின் மகன் இளையராஜா மாட்டை தேடி சென்றுள்ளார். ஐயா பிள்ளை வீட்டின் கொல்லைப்புறம் பகுதியில் உள்ள வயலில் மாடு மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. துண்டிக்கப்பட்டு அகற்றப்படாமல் தொங்கிக் கொண்டிருந்த மின் கம்பி மின்கம்பத்தில் உரசி மின் கசிவு ஏற்பட்டதால் மாடு இறந்ததாக குற்றம் சாட்டியுள்ள குடும்பத்தினர் வருமானம் தரக்கூடிய கரவை மாடு இறந்துவிட்டதாக வேதனை தெரிவித்தனர்.


















