நடிகர் விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் தற்போது தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில் இடம்பெறவில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த மனுவில், கடந்த கரூர் நிகழ்வில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அரசியல் கூட்டங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளை ஈடுபடுத்துவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கும், தேர்தல் நடத்தை விதிகளுக்கும் முரணானது என மனுவில் வாதிடப்பட்டிருந்தது.
மேலும், குழந்தைகளை அரசியல் நிகழ்வுகளில் ஈடுபடுத்தக்கூடாது என மும்பை உயர்நீதிமன்றம் முன்பே உத்தரவிட்டதை மனுதாரர் சுட்டிக்காட்டினார். சட்ட விதிகளை மீறும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
மனுவில், விஜய் மற்றும் த.வெ.க. நிர்வாகத்தின் அலட்சியத்தால் கரூரில் துயர சம்பவம் ஏற்பட்டதாகவும், விஜய் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டார்.
அத்துடன், கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் மற்றும் கட்சி நிர்வாகத்தினர் மீது சிறார் நீதி சட்டம் மற்றும் குழந்தை தொழிலாளர் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில், “தமிழக வெற்றிக்கழகம் இன்னும் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெறாத கட்சி என்பதால், அதன் அங்கீகாரத்தை ரத்து செய்யும் கோரிக்கை பொருந்தாது” என விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, மனுவிற்கு தமிழக அரசு மற்றும் டி.ஜி.பி. பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மனுவில் உள்ள சில கோரிக்கைகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுடன் தொடர்புடையவை என்பதால், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்கள் குறித்த வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்படும் சிறப்பு அமர்வில் இதையும் இணைத்து விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.
 
			















