திருவாரூர் அருகே திருநெய்ப்பேர், மாங்குடி,மாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்நெல் கொள்முதல் தடைப்பட்டு கொட்டி கிடப்பதையும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் இன்று நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கடந்த 10 மாதங்களுக்குள்ளாக ஐந்து முறை மேலாண்மை இயக்குனர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதனால் முன் திட்டமிடல் இன்றி முடங்கியுள்ளது.
சம்பா நெல் கொள்முதல் செய்து உடனுக்குடன் அரவை ஆலைகளுக்கு அனுப்பாமல் இன்று வரை பல்வேறு கிடங்குகளில் இருப்பில் உள்ளது. இதனால் தற்போது அறுவடை செய்யப்படும் நெல்லை கிடங்குகளில் இருப்பு வைக்க முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது.
மேலும் பொது விநியோக திட்டத்திற்கு தேவையான அரிசி வெளி மாநிலங்களில் கிலோ ரூ 27 க்கு கொள்முதல் செய்யப்பட்டு கிலோ ரூ 42 க்கு மாவட்ட கிடங்குகளில் இருப்பு வைக்கப்படும் மோசடி நடைபெறுவதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் தற்போது காவிரி டெல்டாவில் சுமார் 6.50 லட்சம் ஏக்களில் குறுவை அறுவடைப் பணிகள் துவங்கி உள்ளது. அன்றாடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலைய வாயில்களில் தலா 5000ம் முதல் 15000 ம் சிப்பங்கள் வரை அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. சுமார் 10000ம் மூட்டைகளுக்கு மேல் அறுவடை செய்த நெல் மூட்டைகள் கிராமங்கள் தோறும் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கொள்முதலும் தடைப்பட்டு, அறுவடையும் தடைபட்டு விவசாயிகள் பரிதவிக்கிறார்கள்.
எனவே தமிழக அரசு தானே பொருப்பேற்று அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் குழுவை அனுப்பி வைத்து விரைந்து கொள்முதல் செய்திட வேண்டும். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், புயல் சின்னம் உருவாகி வருகிறது. காய்ந்த நிலையில் தரமான நெல் அறுவடை செய்யப்பட்ட நிலையில் மழையால் பாதிக்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே 22% ம் ஈரப்பதம் வரை நிபந்தனையின்றி கொள்முதல் செய்து அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைத்திட வேண்டும் என தெரிவித்தார்


















