வழக்குகளில் தீர்ப்பு வழங்கியதற்காக நீதிபதிகள் கூட சமூக வலைதளங்களில் மோசமாக விமர்சிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். செந்தில்குமார் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜன் தாக்கல் செய்த மனு தொடர்பாக இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
வழக்கு விவரம்
ஆடை வடிவமைப்பாளர் கிறிஸ்டில்லா, தன்னுடன் தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களிலும் யூடியூப்பிலும் பதிவிட்ட வீடியோக்கள் மற்றும் கருத்துக்களை நீக்கக் கோரி மாதம்பட்டி ரங்கராஜன் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “ஜாய் கிரிசில்டா எனது நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் வகையில் தவறான குற்றச்சாட்டுகள் முன்வைத்து உள்ளார். எனவே, அவரது பதிவுகள் மற்றும் வீடியோக்களை நீக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்,” என அவர் கோரினார்.
மனுதாரர் தரப்பு விளக்கம்
வழக்கின் போது மாதம்பட்டி ரங்கராஜன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “ரங்கராஜன் 2013ஆம் ஆண்டு ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தொழில் ரீதியாக கிறிஸ்டில்லாவுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் தவறான குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளார். இதனால் சமூகத்தில் நற்பெயர் குலைந்துள்ளது,” என விளக்கமளித்தார்.
மேலும், தொழில் தொடர்பான நிதி இழப்பு குறித்து தனியான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் கூறினார்.
நீதிபதி கருத்து
வழக்கை விசாரித்த நீதிபதி என். செந்தில்குமார், “வழக்குகளில் தீர்ப்பு வழங்கியதற்காகவே நீதிபதிகள் கூட சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள். அவர்களின் குடும்ப பின்னணி பற்றியும் தேவையற்ற கருத்துக்கள் எழுதப்படுகின்றன. சமூக வலைதளங்களில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுத முடியும். அவற்றை நாம் புறக்கணிக்க கற்றுக்கொள்ள வேண்டும்,” என கூறினார்.
அதே நேரத்தில், “கிறிஸ்டில்லா முன்வைத்த குற்றச்சாட்டுகளை மாதம்பட்டி ரங்கராஜன் ஆதாரங்களுடன் மறுக்க முடியுமா? அவர்களின் தொடர்பு குறித்து உறுதியான விளக்கம் அளிக்க முடியுமா?” என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, கிறிஸ்டில்லா தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
















