கரூரில் 41 பேரை பலி கொண்ட கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தவெக மாவட்ட செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, தமிழக அரசின் உத்தரவின் பேரில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருஅங்கம் கொண்ட ஆணையம் தற்போது விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவ விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும், மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டை ரூ.50 லட்சமாக உயர்த்த வேண்டும் எனக் கோரி பல்வேறு மனுக்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பொதுக்கூட்டங்களை நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டனர். ஏற்கனவே அனுமதி பெற்ற கூட்டங்களுக்கு தடை இல்லை என்றும் தெரிவித்தனர். மேலும், அரசியல் கட்சி பொதுக்கூட்டங்களின் போது குடிநீர், மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ், கழிப்பறை, வெளியேறும் வழி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
சிபிஐ விசாரணை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், “விசாரணை இன்னும் தொடக்க நிலையில் இருக்கையில், சிபிஐக்கு மாற்ற உத்தரவிடுவது எப்படி சாத்தியம்?” என்று கேள்வி எழுப்பினர். மேலும், “உயர்நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்காதீர்கள்” என்றும் எச்சரித்தனர்.
அதேவேளையில், பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு, தவெக தலைவர் விஜய் மற்றும் தமிழக அரசு தரப்பினரை இரு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனுடன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தொடர்புடைய மனுக்களும் விசாரிக்கப்பட்டன. அங்கு, தவெகவினரின் அடாவடியால் ரூ.5 லட்சம் சேதம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
முன்ஜாமின் மனு தள்ளுபடி
மேலும், நாமக்கல்லில் நடந்த பிரசாரத்தின் போது தனியார் மருத்துவமனை சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மீது மேலும் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, அவரின் முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
“கட்சியினரை கட்டுப்படுத்தத் தெரியாதா? பொறுப்புடன் செயல்பட வேண்டாமா?” என நீதிபதிகள் கடும் கேள்வி எழுப்பினர்.