திமுக வெறுப்பு அரசியலை பரப்ப வேண்டும் என்ற பிஜேபி-யின் செயல் திட்டத்தின்படி விஜய் செயல்படுவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு, திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திதினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் துயர சம்பவத்திலிருந்து விஜய்யை காப்பாற்ற பிஜேபி களமிறங்கியிருப்பதாகவும், விஜய் அவர்களது கட்டுப்பாட்டில் தான் செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாமல், அவரை கைதும் செய்யாமல் தமிழக அரசு காப்பாற்றி வருவதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும், திருமாவளவன் கூறினார். திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.