இடுக்கி : கேரளாவின் இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி, தமிழகத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்டப்பனை பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயராமன், மைக்கேல் செல்வன், சுந்தரபாண்டியன் ஆகியோர் ஈடுபட்டனர். இந்த நிலையில், முதலில் தொட்டிக்குள் இறங்கிய மைக்கேல் செல்வன் நீண்ட நேரம் வெளியே வராததால், ஒப்பந்ததாரரான ஜெயராமன் உள்ளே இறங்கினார். அவரும் மயக்கமடைந்த நிலையில், பின்னர் சுந்தரபாண்டியனும் உதவச் சென்றபோது விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார்.
உடனடியாக மூவரும் அருகிலுள்ள கட்டப்பனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், பரிசோதித்த மருத்துவர்கள் மூவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர்.
மூவரின் உடல்களும் இடுக்கி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த துயரச் சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
















