சென்னை:
மக்களுக்கு குறைந்த மதிப்பு கொண்ட பணத்தாள்கள் எளிதாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், ஏடிஎம்களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கும் ஏடிஎம் ஆபரேட்டர்களுக்கும் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போது சென்னை, கோவை உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில் 500 ரூபாய் நோட்டுகளே ஏடிஎம்களில் அதிகம் உள்ளன. 100, 200 ரூபாய் நோட்டுகள் கிடைப்பது மிகவும் அபூர்வமாகிவிட்டது. இதனால் கடைகளில், பெட்ரோல் பங்குகளில் கூட சில்லறை பற்றாக்குறை கடுமையாக உள்ளது. மக்கள் பெரும்பாலும் சில்லறைக்காக தவிக்க நேரிடுகிறது.
இந்த நிலைமையை மாற்ற வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. “அடிக்கடி பயன்படும் குறைந்த மதிப்பு பணத்தாள்களை ஏடிஎம்களில் வழக்கமான அடிப்படையில் வைத்திருக்க வேண்டும்; இதை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்,” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் 75% ஏடிஎம்களில் குறைந்தது ஒரு அறையில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் அனைத்து ஏடிஎம்களிலும் இதை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
மக்களின் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.