கரூர்: கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடந்த தவெக தலைவர் விஜயின் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மதியழகன் மற்றும் மாசி பவுன்ராஜ் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, தாங்கள் கேட்ட இடத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததாகவும், குறுகிய இடமான வேலுச்சாமிபுரத்தில் கூட்டம் நடத்தக் கட்டாயப்படுத்தியதால் நெரிசல் ஏற்பட்டதாகவும், 10 ஆயிரம் பேர் மட்டுமே வருவார்கள் என எதிர்பார்த்ததாகவும் நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர். மேலும், காவல்துறை போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என்றும் வாதிட்டனர்.
இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பில், தவெக நிர்வாகிகள் கேட்ட இடங்களில் சிலைகள், பெட்ரோல் நிலையம் போன்ற காரணங்களால் அனுமதி வழங்கப்படவில்லை என்றும், பொதுச்செயலாளர் ஆனந்தின் ஒப்புதலுடன் தான் இடம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். விஜய் அனுமதிக்காத பாதையில் வந்ததாலும், நேர அட்டவணை கடைபிடிக்கப்படாததாலும் கூட்டம் கட்டுக்குள் வைக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.
இருதரப்புகளின் வாதங்களையும் கேட்ட நீதிபதி பரத்குமார், “விஜய் போன்ற பிரபல தலைவர் வரும்போது, கூட்டம் 10 ஆயிரமாக மட்டுப்படும் என எப்படிச் சொல்கிறீர்கள்? திடல் போன்ற பரந்த இடம் கேட்கப்படாதது ஏன்? கூட்டம் அதிகரித்ததை உணர்ந்த பிறகும், பிரச்சாரத்தை ஏன் நிறுத்தவில்லை?” என கேள்வி எழுப்பினார்.
பின்னர், “மனசாட்சிப்படி தான் உத்தரவு வழங்குவேன்” என்று குறிப்பிட்ட நீதிபதி, கைதான தவெக நிர்வாகிகள் இருவரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.















