2025 ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா–பாகிஸ்தான் போட்டிகள் மீண்டும் ஒரு முறை சர்ச்சைக்குள்ளாகியுள்ளன. வீரர்களின் நடத்தை தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.
லீக் கட்டத்தில், பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்க மறுத்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பின்னர் செய்தியாளர் சந்திப்பில், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்ததோடு, “அதற்கான பதிலடி தற்போது கொடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார். இதற்குப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அரசியல் ரீதியான கருத்து என புகார் அளித்தது.
அதே நேரத்தில், இரண்டாவது போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் சர்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப், ரசிகர்கள் எழுப்பிய ’கோலி’ கோஷங்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய சைகை செய்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், மற்றொரு பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான், விக்கெட் எடுத்த பிறகு துப்பாக்கி சுடும் விதமாக கொண்டாடியதும் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியது.
ஐசிசி நடவடிக்கை
இந்த சர்ச்சைகளுக்கு பிறகு, நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் தலைமையில் விசாரணை நடைபெற்றது. அதில் :
சூர்யகுமார் யாதவ் – நடத்தை விதிகளை மீறியதற்காக போட்டிக்கட்டணத்தில் 30% அபராதம். (ஆனால் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.)
ஹாரிஸ் ராஃப் – ரசிகர்களுக்கு எதிராக சைகை செய்த குற்றத்திற்காக 30% அபராதம்.
சாஹிப்சாதா ஃபர்ஹான் – எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது.
இந்திய அணி, சூர்யகுமாருக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மேல்முறையீடு இன்னும் விசாரணையில் உள்ள நிலையில், இறுதிப்போட்டிக்குப் பிறகு முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.