மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2026 தொடரை முன்னிட்டு, மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை லிசா கேட்லி நியமிக்கப்பட்டுள்ளார்.
இரு முறை உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்றிருந்த லிசா கேட்லி, தனது அனுபவத்தால் உலக மகளிர் கிரிக்கெட்டில் தனித்துவத்தை நிலைநிறுத்தியவர். 9 டெஸ்ட், 82 ஒருநாள் மற்றும் ஒரு டி20 சர்வதேச போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடியுள்ளார்.
2023-ல் அறிமுகமான மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில், மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை இரண்டு முறை (2023, 2025) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. அடுத்தடுத்த தொடருக்கான தயாரிப்பில் இருக்கும் நிலையில், அணிக்கு புதிய வலுசேர்க்கையாக லிசா கேட்லி நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனம் குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீடா அம்பானி தெரிவித்ததாவது :
“மும்பை இந்தியன்ஸ் குடும்பத்திற்கு லிசா கேட்லியை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அவரது பயணம் பல தலைமுறையினரை ஊக்குவித்துள்ளது. அவர் இணைவதால், எங்கள் அணியில் ஒரு புதிய தொடக்கம் உருவாகும். மும்பை இந்தியன்ஸ் அணி மேலும் உயரங்களை அடையும் என்பதில் நம்பிக்கை உள்ளது,” என்றார்.
தலைமைப் பொறுப்பு கிடைத்ததையடுத்து லிசா கேட்லி கூறுகையில் :
“மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு பெரும் பெருமை. வீராங்கனைகளுக்கும், அணியினருக்கும் நிர்வாகம் வழங்கும் அக்கறை என்னை மிகவும் ஈர்த்தது. திறமையான அணியுடன் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று தெரிவித்தார்.