அதிமுகவிலிருந்து கூட்டணி கட்சியினர் மட்டுமல்ல செங்கோட்டையன் போன்ற அதிமுகவினரே வெளியேறி வருகிறார்கள் எடப்பாடி தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கடுமையாக விமர்சித்தார்.
புதுச்சேரியில் கலைஞர் உருவ சிலை, கலைஞர் நூலகம், மற்றும் கதிர்காமம் தொகுதி திமுக அலுவலகம் திறப்பு என முப்பெரும் விழா நடைபெற்றது. கதிர்காமம் தொகுதி செயலாளர் வடிவேல் தலைமையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு அழைப்பாளராக தலைமைக் கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்பாரதி மற்றும் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தலைமைக் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி…
தமிழகத்தில் அமைக்கப்படும் கூட்டணி புதுச்சேரிக்கும் பொருந்தும், ஓர் அணியில் தமிழகம் என்பது போல் புதுச்சேரியிலும் உறுப்பினர் சேர்க்கை தொடங்கும் என்றார். தமிழகத்தில் 200 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று குறிப்பிட்ட ஆர்.எஸ்.பாரதி. புதுச்சேரியில் 4 முறை திமுக ஆட்சி அமைந்துள்ளது..5 வது முறையும் திமுக ஆட்சி அமைக்கும் என்று குறிப்பிட்டார்.
திமுகவிற்கு கூடுவது கொள்கை கூட்டம் விஜய்க்கு கூடுவது மாய கூட்டம் என்று விமர்சித்த அவர் 2019-ல் இருந்து திமுக கூட்டணி உடையும் என்று எடப்பாடி கூறி வருகிறார் ஆனால் அவரது கூட்டணியில் இருந்து கூட்டணி கட்சியினர் வெளியேறுவதுடன், செங்கோட்டையன் போன்ற அதிமுகவினரும் வெளியேறி வருகிறார்கள், எடப்பாடி அவரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் பாரதி தெரிவித்தார்.
முதலமைச்சரின் வெளிநாடு பயணம் குறித்து அண்ணாமலையின் விமர்சனம் குறித்து கேட்டபோது…
பீஸ் போன பல்புக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கூட்டணி குறித்து ராகுல் காந்தியும், ஸ்டாலினும் முடிவெடுப்பார்கள் என்றார். விஜய்க்கு கூடும் கூட்டம் அதிகரித்து கொண்டே இருக்கிறதே…? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்…
மழை ஜோராகதான் பெய்யும் ஆனால் ஒன்றுமில்லாமல் போகும் என்று அடிக்கடி அண்ணா அடிக்கடி சொல்வார் இது விஜய்க்கும் பொருந்தும் என்றார்.
















