நாகை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று நாகை புத்தூர் அண்ணா சிலை அருகே பிரச்சார கூட்டத்தை நடத்தினார். 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணத்தைத் தொடங்கிய அவர், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பரப்புரை நடத்துவதாக கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை திருச்சியில் தனது முதல் அரசியல் சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய விஜய், இந்த வாரம் நாகை மற்றும் திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். நாகையில் வருகை தந்த அவர், ஏராளமான தொண்டர்கள் வரவேற்று கொண்டனர்.
பிரச்சாரத்தில் பேசும் போது விஜய், “அண்ணா, பெரியாருக்கு வணக்கம். எனது மீனவ நண்பர்களுக்கு என்றும் அன்பு வணக்கம். என் மனதுக்கு மிகவும் நெருக்கமான நாகப்பட்டினம் மண்ணில் இருக்கிறேன். மதச்சார்பில்லா சமுதாயத்தின் எடுத்துக்காட்டாக நாகப்பட்டினம் உள்ளது. தமிழ்நாட்டில் மீன் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், இதற்கான போதுமான வசதிகள் இங்கு இல்லை. 2011-ல் இங்கே மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தினேன். இன்று மீனவர்கள் நலனுக்காக நான் குரல் கொடுக்கிறேன். ஈழத் தமிழர்களுக்கு நிற்க வேண்டியது நமது கடமை.” என்றார்.
மேலும், பிரச்சாரத்தில் தடை விதிப்புகள் மற்றும் அரசியல் முறைகளை குறிவைத்து, அவர் “எனது பரப்புரைக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர். இதற்கான எல்லா விதிமுறைகளையும் பாருங்களேன். நேரடியாக கேட்கிறேன் சி.எம் சார்… மிரட்டி பார்க்கிறீங்களா? கொள்கையை பெயருக்கு வைத்து குடும்பத்தை வைத்து கொள்ளையடிக்கவில்லை. உழைத்து சம்பாரித்தவன் நான். என் பின்னால் மக்கள் படை உள்ளது. இனி தடைகள் போட்டால் மக்களிடமே அனுமதி பெறுவேன்.” என்றார்.