தமிழ்நாட்டின் நவீன அரசியல் வரலாற்றில் கண்ணியத்துக்கும், மனிதநேயத்துக்கும், தலைமைப் பண்புகளுக்கும் என்றும் உதாரணமாகத் திகழ்பவர் பேரறிஞர் அண்ணாதுரை. அரசியல் எதிரிகளைப் போலும் மதித்து நடந்தவர் என்ற தனித்துவத்தால், அவர் இன்று வரை மக்களாலும், அரசியல்வாதிகளாலும் நினைவு கூறப்படுகிறார்.
பெரியாரின் சீடராகத் துவங்கிய அண்ணா, கருத்து முரண்பாடுகள் காரணமாக தனித்து கட்சியை அமைத்தாலும், ஒருநாளும் அவரை தாக்கிக் கூறவில்லை. அதேபோல், காமராஜரை எதிர்த்து அரசியல் செய்தாலும், அவரின் நேர்மை, திறமை ஆகியவற்றை புகழ்ந்தவர் அண்ணா. காமராஜர் தேர்தலில் தோற்றபோது மனவேதனை அடைந்து “இன்னொரு தமிழன் அவரைப் போன்ற நிலைக்கு வர நூறு ஆண்டுகள் ஆகும்” என்று வருந்தியதும் அவரது அரசியல் பண்பின் சான்றாகும்.
1937 ஆம் ஆண்டில் ராஜாஜி கொண்டு வந்த இந்தி கட்டாயப் பாடத்திட்டத்தை எதிர்த்து போராடியவர் அண்ணா. ஆனால், 1964 ஆம் ஆண்டில் மீண்டும் எழுந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு, தனது முன்னாள் எதிரியான ராஜாஜியையே தலைமை ஏற்க அழைத்தது அண்ணாவின் உயர்ந்த மனப்பான்மையையே காட்டுகிறது.
அண்ணாவின் அரசியல் பாணியில், எதிரிகளுக்கும் அன்பு காட்டும் தன்மை பிரதானம். சம்பத் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தில், “தம்பி பசி பொறுக்கமாட்டானே” என்று கவலைப்பட்டவர், பழங்களைத் தாங்கிச் சென்ற சம்பவம் இன்று வரை பேசப்படுகிறது.
1967 ஆம் ஆண்டு முதல்வராகப் பதவியேற்ற அண்ணா, மாநில அரசியலுக்கே தனித்துவ அடையாளம் அமைத்தார். டெல்லியை மையமாகக் கொண்ட அரசியல் சூழலில், மாநிலங்களே இந்தியாவின் அடிப்படை என்று வலியுறுத்தியவர். ‘தேசியம்’ என்பதற்கு பதில் ‘தாயகம்’ என்ற கருத்தை முன்வைத்தார்.
தேசிய அளவிலும் அண்ணா அனைவராலும் மதிக்கப்பட்டார். காந்தியை “உலகின் ஒளி” என்றும், நேருவை “கட்டிமுடிக்கப்பட்ட கோபுரம்” என்றும் புகழ்ந்தார். நாடாளுமன்றத்தில் இடதுசாரி பூபேஷ் குப்தாவின் உரைகளை தவறாமல் கேட்டவர்; வாஜ்பாயின் பேச்சை ரசிக்க பொதுக்கூட்டங்களில் தரையில் அமர்ந்தும் கேட்டவர்.
அண்ணாவின் மீது வாஜ்பாய் கொண்டிருந்த மதிப்பும் குறிப்பிடத்தக்கது. தனது கவிதைத் தொகுப்பை தமிழில் மொழிபெயர்த்தபோது அதை அண்ணாவுக்கே அர்ப்பணித்தார். “தமிழக அரசியலின் ஜாம்பவான் அண்ணாதுரை, சிறந்த நாடாளுமன்ற வாதியும் உணர்வுபூர்வமான தலைவரும் ஆவார்” என்று வாஜ்பாய் பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.
அரசியலில் கண்ணியமும், மனிதநேயமும் எவ்வாறு இணைந்து நிலைக்க முடியும் என்பதை வாழ்வில் நிரூபித்தவர் பேரறிஞர் அண்ணா. அதனால் தான், அவர் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் என்றும் கண்ணியத்தின் அடையாளமாகத் திகழ்கிறார்.
















