திருச்சி : நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் கடந்த சனிக்கிழமை திருச்சியில் தனது மக்கள் சந்திப்பு பரப்புரை பயணத்தை தொடங்கினார். இதற்காக மாவட்ட காவல்துறை 23 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியிருந்தது.
ஆனால், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமாக திரண்டதால், விஜய் திட்டமிட்ட நேரத்தில் பிரசாரம் செய்ய இயலாமல் போனது. மேலும், காவல்துறையின் நிபந்தனைகள் மீறப்பட்டதோடு, அரசு மற்றும் தனியார் சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தச் சூழலில், விதிமீறல் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக திருச்சி மாவட்டத் தலைவர் கரிகாலன், மகளிர் அணி மாவட்டத் தலைவி துளசி மணி, வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆதித்ய சோழன், இமயத் தமிழன், விக்னேஷ் குமார் ஆகிய ஐந்து பேர்மீது காவல்துறை இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது.
அதே நேரத்தில், கட்சித் தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் ஆனந்த் ஆகியோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.