மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களின் நீதி அரசர்கள் ஆய்வு மேற்கொண்டு, லோக் அதாலத் நீதிமன்றத்தில் தீர்ப்பு காணப்பட்ட வழக்குகளுக்கு 42 லட்ச ரூபாய் மதிப்பிலான காசோலைகளை வழங்கி விவாகரத்து கேட்ட தம்பதிகளை சேர்த்து வைத்தனர்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 9 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த நீதிமன்றங்களின் வருடாந்திர ஆய்வுக்காக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதி அரசர் திருமதி விக்டோரியா கௌரி, சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசர் சௌந்தர் ஆகியோர் வருகை புரிந்தனர்.
தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் ஆய்வகங்கள் வைப்பறைகள் இணைய வழி வழக்குகள் விவரங்களை தெரிந்து கொள்ளும் தானியங்கி இயந்திரம், வழக்காடு அறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் முதன்மை சார்பு நீதிபதி திருமதி சுதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி பவதாரணி ஆகியோர் பங்கேற்ற லோக் அதாலத் சார்பில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் விபத்து காப்பீட்டுக்கான வழக்கில் சமரச தீர்வாக இரண்டு வழக்குகளில் சுமார் 42 லட்ச ரூபாய் மதிப்பிலான காசோலைகளை உயர் நீதிமன்ற நீதி அரசர்கள் பயனாளிகளுக்கு வழங்கினர்.
தொடர்ந்து விவாகரத்து கேட்ட தம்பதியினருக்கு இடையே சமரசம் பேசி அவர்களை ஒன்று சேர்த்து வைத்தனர். வழக்கறிஞர்கள் நித்தின் பாபு, அன்புரோஸ், மனோஜ் ஆகியோர் விபத்து காப்பீட்டு வழக்கில் ஆஜரானார்கள்.
