தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை அரியலூரில் பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில், இதற்கான அனுமதி தொடர்பாக காவல்துறையுடன் தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
விஜய் நாளை காலை திருச்சியில் மக்களை சந்தித்துப் பேசிய பின்னர், பிற்பகல் 3 மணி முதல் 4 மணிக்குள் அரியலூர் அண்ணா சிலை அருகே உரையாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தவெக நிர்வாகிகள், வழக்கமாக தலைவர்கள் பயன்படுத்தும் மாதா கோவில் சத்திரம் வழியாக அண்ணா சிலை செல்ல அனுமதி கோரியுள்ளனர்.
ஆனால், அரியலூர் நகருக்குள் பெரிய அளவில் மக்கள் திரள்வது போக்குவரத்துக்கு இடையூறு தரும் என்ற காரணத்தால், புறவழிச்சாலை வழியாக மாவட்ட ஆட்சியர் ரவுண்டானாவில் இருந்து அண்ணா சிலை செல்லும் பாதையை காவல்துறை பரிந்துரைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, இருதரப்பினரும் கலந்தாலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
மற்ற மாவட்டங்களில் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அரியலூரில் இழுபறி நிலவுவது கவனம் ஈர்த்துள்ளது. இதற்கிடையில், நாளைய பிரச்சாரத்துக்கான இலச்சினையை தவெக வெளியிட்டுள்ளது. அதில் “உங்க விஜய் நா வரேன்” எனும் வாசகமும், மாநாட்டில் முன்வைக்கப்பட்ட “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளன.
















