சென்னை: டிஜிபி அலுவலகம் வெளியே நடந்த மோதலில் ஈடுபட்ட புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்திக்கு எழும்பூர் நீதிமன்றம் நீதிமன்றக் காவல் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 6ஆம் தேதி டிஜிபி அலுவலக வாயிலில், விசிக நிர்வாகிகள் ஏர்போர்ட் மூர்த்தியை ஓடி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் மூர்த்தி தனது பாக்கெட் கத்தியால் எதிர்த்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் விசிக நிர்வாகி திலீபன் காயமடைந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 16 தையல்கள் போடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவத்தை அடுத்து, இருதரப்பினரும் மெரினா காவல் நிலையத்தில் மாறி மாறி புகார் அளித்தனர். மூர்த்தி தாக்கியதாக விசிக நிர்வாகி திலீபன் புகார் அளிக்க, அதே சமயம் தன்னை தாக்கியவர்கள் மீது மூர்த்தியும் புகார் அளித்தார். இரு தரப்பினரின் புகாரின் பேரில் மெரினா போலீசார் இருதரப்பினர்மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
விசிக நிர்வாகிகள் முருகன், திலீபன், குமரப்பா, ஜாஹிர் உள்ளிட்ட ஐந்து பேர்மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல், ஏர்போர்ட் மூர்த்தி மீதும் தாக்குதல், ஆபாசமாக பேசியது, கொடுங்காயம் ஏற்படுத்தியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர் அடையாறு சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் விசாரணை நடத்திய போலீசார், மூர்த்தியை மெரினா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு முன் மருத்துவ பரிசோதனையில் அவர் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சைக்குப் பின் உடல்நிலை சீரானதால் இன்று மூர்த்தியை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அதில் நீதிமன்றம் அவரை வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. இதனையடுத்து, மூர்த்தியை புழல் சிறையில் அடைக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
 
			















