“தமிழ்நாட்டில் வரும் சட்டசபை தேர்தலில் திமுக – அதிமுக இடையேதான் போட்டி இருக்கும்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து, தனியார் செய்தி நிறுவனத்திற்குக் கொடுத்த பேட்டியில் அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது, “வரும் தேர்தலில் திமுக – தவெக இடையே தான் போட்டி இருக்கும்” என்று தவெக தலைவர் விஜய் கூறியிருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “அது விஜயின் தனிப்பட்ட விருப்பம் மட்டுமே. உண்மையில் தமிழ்நாட்டில் முக்கிய போட்டி திமுக – அதிமுக இடையே தான் உள்ளது” எனக் கூறினார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் அதிமுக ஆட்சியை இழந்ததாக அவர் குறிப்பிட்டார். மேலும், அதிமுக – பாஜக கூட்டணி அமைந்ததையடுத்து, தோல்வி பயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறான கருத்துகளை பரப்பி வருகிறார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
நீட் தேர்வு தொடர்பாக, திமுக அரசு இரட்டை வேடத்தில் நடந்து வருவதாக எடப்பாடி பழனிசாமி சாடினார். “தமிழகத்தில் அதிக முதலீடுகள் வந்துள்ளதாக முதலமைச்சர் கூறுவது தவறான பிம்பம். மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றால் திமுக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே திமுக கூட்டணி வெற்றி பெறுவது இயலாத காரியம். அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

















