சென்னை: தி.நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், ரோட்டரி சங்கம் சார்பில் பத்ம விபூஷன் விருது பெற்ற பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியனுக்கு YGP கல்வியாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது குறித்து, “2024-ஆம் ஆண்டு டிடிவி தினகரன் மிக முக்கியமான தலைவராக இருந்தார். தமிழக அரசியலை நன்கு புரிந்தவர். எனவே, 2026 NDA ஆட்சிக்காக அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்வார் என்று நம்புகிறேன். அதேபோல், ஓபிஎஸ் அவர்களும் சாதாரண அரசியல்வாதி இல்லை; அவர் எடுத்த முடிவும் மாறும் என்று எதிர்பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி NDA-வின் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என அமித்ஷா தெளிவுபடுத்தியிருப்பதாக கூறிய அண்ணாமலை, “சின்ன சின்ன பிரச்சினைகள் இருந்தாலும் அவை களையப்படும். 2026-ல் தமிழகத்தில் NDA ஆட்சி அமைக்கும்” என்றார்.
பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் தன்னைப் பற்றிய அதிருப்தி கேள்விக்கு, “என்னை பார்த்தால் அதிருப்தியில் இருக்கிற மாதிரி தெரிகிறதா? வேலைப் பளு காரணமாக கலந்துகொள்ள முடியவில்லை. இதை கட்சித் தலைவர்களுக்கும் அமித்ஷாவுக்கும் முறையாக தெரிவித்திருந்தேன்” எனத் தெரிவித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற கேள்விக்கு, “அது உண்மை தான். ஆனால் தாக்கம் ஏற்படுத்துவது வேறு, ஆட்சி அமைப்பது வேறு. NDA ஆட்சியே தமிழகத்தில் வரும்” என்றார்.
பாஜகவில் சலசலப்பு உள்ளது என்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்தை பற்றி கேட்கப்பட்டபோது, “அரசியலில் இருந்தால் சிலர் நல்லவன் என்று சொல்வார்கள், சிலர் கெட்டவன் என்று சொல்வார்கள். கெட்டவன் என்று சொல்பவர்களிடம் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் என் நேரமே போய்விடும். எனக்கு மாற்றம் வேண்டும் என்பதே முக்கியம். அதற்காகத்தான் களத்தில் நிற்கிறேன்” என்று பதிலளித்தார்.