சென்னை: பிரபல சின்னத்திரை நடிகர் மற்றும் பிக்பாஸ் அருண் பிரசாத் – நடிகை அர்ச்சனா ஜோடியின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை இருவரும் சமூக வலைதளங்களில் அறிவித்து, புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இரண்டு ஆன்மாக்கள்.. ஒரே இதயம்.. எல்லையில்லா அன்பு. என்னவளை கண்டறிந்துவிட்டேன். எங்களின் பயணம் தொடங்கியது” என்று பதிவு செய்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் மூலம் நாயகனாக அறிமுகமான அருண், தொடர்ந்து ‘பாண்டியன் ஸ்டோர்’, ‘ராஜா ராணி’, ‘கனா காணும் காலங்கள்’ உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். மேலும், பிக்பாஸ் தமிழ் சீசன் 8-இல் கலந்துகொண்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
அதேபோல், ‘ராஜா ராணி’ சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் அர்ச்சனா. பின்னர் பிக்பாஸ் சீசன் 7-இல் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த அவர், தொடக்கத்தில் எதிர்ப்பை சந்தித்தாலும், தனது தைரியமான பேச்சு மற்றும் இயல்பான விளையாட்டின் மூலம் ரசிகர்களின் மனதை வென்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது அருண் – அர்ச்சனா நட்பு காதலாக மாறியதாக வதந்திகள் கிளம்பின. இருவரும் அதுகுறித்து வெளிப்படையாகப் பேசவில்லை. இந்நிலையில், இருவரும் அதிகாரபூர்வமாக தங்களது திருமணத்தை அறிவித்துள்ளதால், ரசிகர்கள் வாழ்த்து மழையில் திளைத்து வருகின்றனர்.